Home Blogs 1887 – கர்த்தர் கிருபை கூர்ந்து மனதிறங்கினார்!

1887 – கர்த்தர் கிருபை கூர்ந்து மனதிறங்கினார்!

135
0

1887 டிசம்பர் மாதம் அட்வெந்து மூன்றாம் ஞாயிறில் (10-12-1887) போலையர்புரத்தில் தோன்றிய அந்நோய் வெகுவிரைவில் முதலூர், அடையல், வைரவம், கங்காணீயார்புரம், டக்கர்புரம் என்று ஒவ்வொரு ஊரிலும் பரவிவிட்டது.

இவற்றில் அதிகமாய்ப் பாதிக்கப்பட்டது முதலூர்தான். முதலூரில் வரலாறு கண்டிராத அளவு அது கொடியதாயிருந்தது. தினந்தோறும் நான்கு முதல் எட்டுப் பேர் மரித்தனர் ஒரு ஞாயிறில் மரித்த பத்து பேரில் அதில் எட்டுப் பேரைத்தான் அன்று அடக்கம் பண்ண முடிந்தது, இரண்டு மறு நாள் வரைக் காத்திருக்கவேண்டியதாயிற்று. ஏனெனில் பிரேதத்தைச் சுமக்க ஆள் கிடைக்கவில்லை. அத்தனை பீதி!

ஒரு குடும்பத்தில் ஒரே நாளில் தாயும் தகப்பனும் இறந்தனர். மற்றொன்றில் தாயும் தகப்பனும் ஒரே நாளிலும், பத்து வயது. 15 வயதுடைய அவர்களுடைய இரு மகன்கள் மறு நாளும் மரணமாயினர் மற்றொன்றில் அண்ணன் முதல் நாள்.

தம்பியும் தங்கையும் மறு நாள் சில குடும்பங்கள் தம் மக்களனைவரையும், சில பெற்றோர் இருவரையும், வேறு சில தகப்பனை மாத்திரம், அல்லது தாயை மாத்திரம், மற்றும் சில இரண்டொரு மக்களையும் மேலும் சில இளம் மனைவியையும் அல்லது புது மாப்பிளையான புருஷனையும் இழந்து நின்றன பயங்கர பீதி மனுஷரைப் பிடித்தாட்டியது.

சாவுக்கு அஞ்சி, மக்கள் தைரியத்தைக் கைவிட்டார்கள் மாலைப் பொழுது வந்ததும் வீடுகளுக்குட்சென்று கதவைப் பூட்டிக்கொள்ளுவார்கள். ஒருவரும் வெளியில் வரமாட்டார்கள். பயத்தினால் அநேகர் தங்கள் சுபாவ அன்பையும்கூட இழந்தார்கள் ஒரு வீட்டில் ஒருவருக்குக் காலராக் கண்டுவிட்டால் நோயாளியைத் தவிக்க விட்டுவிட்டு அனைவரும் காட்டுக்கு ஓடி விடுவார்கள்!

நோயாளி நாதியின்றிச் சாவான்(ள்). புருஷன் மனைவியைக் கைவிட்டான்; மனைவி புருஷனைக் கைவிட்டாள். பெற்றோர் பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்றோரையும் கைவிட்டனர். அந்தோ, பரிதாபம்! சில வீடுகளில் கைவிடப்பட்டுச் செத்தவர்களின் பிரேதங்கள் அடக்கம் பண்ணுவாரின்றிக் கிடந்து நாறின.

ஒரு வீட்டில் ஒருவன் செத்துவிட்டால், மற்றவர்கள் பயத்தினால் வாயைக்கூடத் திறக்கமாட்டார்கள்! அழுவதெங்கே? ஊரே செத்துவிட்டது போல் தேன்றியது. அத்துணை மயான அமைதி! காலராவின் கோரத் தாண்டவம் உச்ச நிலையிலிருந்த ஜனவரி மாதத்தில் (1888), பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. மாலை ஆராதனைகள் நான்கு மணிக்கே முடிந்து விடும்.

சூரிய அஸ்தமானத்தின் பின் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டார்கள். “இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் “பயந்து நடுங்கினார்கள்.

குருவானவராகிய S தேவசகாயம் ஐயரும், உபதேசியார், பள்ளிக்கூட ஆசிரியர், சபையின் மூப்பர்மாரில் சிலர், சில வாலிபருமாகிய ஒரு சிறு கூட்டத்தார் பகற்பொழுதில் தெருத் தெருவாக நடந்து சங்கீதம் வாசித்து, கீர்த்தனைகள் பாடி, லித்தானியா சொல்லி, ”கர்த்தாவே, இந்தக் கொள்ளை நோயை அகற்றும்,” என்று தினந்தோறும் ஜெபித்து வந்தார்கள்.

மக்கள், “கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும் படி என் முடிவையும் என் நாடகளின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்” “நீரே இதைச் செய்கிறீர் என்று என் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன் என்னிலிருந்து உமது வான தயை எடுத்துப்போடும் : கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர் : உமது அடியாருக்காகப் பரிதபியும்”, என்றபடி சங்கீதக்காரனோடு புலம்பியழுதார்கள்.

சிலர், கிறிஸ்து நாதர் மீது நம்பிக்கையிழந்து, தெய்வமில்லை யென்று எண்ண ஆரம்பித்து விட்டனர் வைரவம். தட்டார்மடம், போலையர்புரம் முதலிய சபைகளில் சிலர் மறுதலித்துவிட்டார்கள், முதலூரிலும் வேறு சில சபைகளிலும் சிலர் குடியின் மூலம் தங்கள் பயங்களையும் கவலைகளையும் மறக்கப் பிரயாசப்பட்டனர்

வேறு சிலர் வெறும் பீதியின் காரணத்தால் தங்கள் புத்திசுவாதீனத்தை இழந்தார்கள் மற்றும் சிலர் தங்களுக்கு அருமையானவர்களைச் சாகக் கொடுத்த துயர மிகுதியால் அவ்வாறாயினர். அந்நிலையில், முதலூரைக் கர்த்தர் மறந்தாரோ? கருணைக் கடவுள் கைவிட்டாரோ ?

அல்ல, அல்ல ! அந்தகாரமிகுந்த அந்த நாட்களில் ஆண்டவர் அருள் ‘ஒளி’ ஒன்றை எழுப்பினார் குட்டி ஆபிரகாம்’ நாடார் என்ற கிறிஸ்தவரொருவரிருந்தார். கல்லாதவர், ஆனால் ஞானவான், விஷயங்களை நன்கு விளங்கிக் கொள்ளக்கூடியவர் ஒரு விஷயத்தைப்பற்றி உரையாட ஆரம்பித்தால், தான் கூறுபவைகளுக்கு ஆதாரங்காட்டி அநேக வேதவாக்கியங்களையும் பகுதிகளையும் எடுத்துக்காட்டுகளாகவும் மேற்கோள்களாகவும் ஞாபகத்திலிருந்தே சொல்லக்கூடியவராயிருந்தார், ஆகையால், ஊரார் அவருக்கு “ஞானியார்” என்று பட்டப் பெயர் கொடுத்திருத்தார்கள். அவர் ஒரு உண்மைக் கிறிஸ்தவர். முதலூர் சபையின் தூண்களில் ஒன்றாக விளங்கியவர்.

அவருடைய மனைவி பரிபூரணம் அம்மாள் ஓரு பக்தை; பரிசுத்தவாட்டி; ஆலய வாஞ்சை, ஆராதனை ஆசரிப்பு, கிறிஸ்தவ அன்பு, பிறருக்கு உதவும் ஆர்வம், தன்னலமின்மை, தன்னடக்கம், தன்னொடுக்கம், தாழ்மை முதலிய கிறிஸ்தவப் பண்புகள் மிக்கவர், தேவசகாயம் ஐயர் எழுதியுள்ள ஒரு ஆங்கில வாக்கியம் அந்தம்மாளைப் படம் பிடித்துக்காட்டும்.

அவ்வாக்கியம் : ”An Angel of love and mercy was Paripooranam” அவ்வம்மையார் அவ்விருண்ட நாட்களில் பல மணி நேரங்களைத் ‘தொடர்ந்து ஜெபிப்பதில்’ செலவிட்டார். காலரா தங்கு தடையின்றி மக்களை வாரிக்கொண்டு சென்ற ஜனுவரி, பெப்ருவரி மாதங்களில். எவரும் தெருவிலிறங்கப் பயந்து வீடுகளில் பதுங்கிக்கொண்ட இரவு வேளையில், அவர் தெருத்தெருவாய் நடந்து ஒவ்வொரு தெருவிலும் பல பல இடங்களில் நின்று ஜெபிப்பார்.

அம்மாளுடைய கணவனாருக்கும் சுற்றத்தாருக்கும் இரவு வேளைகளில் அத்தீர்க்கதரிசினி அவ்வாறு தன்னை மரண அபாயத் துக்குள்ளாக்கிக்கொண்டது சம்மதியில்லை. அவர்கள் அவரிடம், “இரவு வேளைகளைத் தவிர்த்துப் பகலில் அக்கடமையை நிறைவேற்றிக் கொள்ளச் சொன்னார்கள்.

அவரோ, கர்த்தர் சொப்பனங்களிலும் தரிசனங்களிலும் தனக்குக் காட்சி தந்து, இரவில் மக்கள் மிகுந்த பயத்துடனிருந்த வேளையிற்றான் அத்திருப்பணிவிடையை நிறைவேற்ற கட்டளையிட்டிருக்கிறார் என்றும், “கர்த்ததருக்கே கீழ்ப்படிவேன், உங்களுடைய ஆலோசனைகளுக்கு இணங்கமாட்டேனென்றும் தீர்மானத்துடன் கூறிவிட்டார். அவர்கள் அவ்வம்மையாருக்குப் புத்திசுவாதீனமில்லையென்று எண்ணிக்கொண்டார்கள்!

கணவனைப் போலவே எழுத்தறிவற்றவராயினும், அக்கொடிய காலங்களில் முதலூர்ச் சபையின் விசுவாசத்தையும் கிறிஸ்தவ நம்பிக்கையையும் காத்துக் கொள்வதில் கர்த்தருடைய கையின் கருவியாய்மைந்த பெரும் பாக்கியமும் சிலாக்கியமும் ”முதலூர் பரிசுத்தவாட்டியாகிய பரிபூரணம் அம்மையா”யாருடையதே.

தீர்க்கதரிசினியாகிய பரிபூரணம் அம்மாளின் ஊக்கமான வேண்டுதலினாலும், அழுது ஏகமாக மனந்திரும்பினதினாலும் கர்த்தர் கிருபை கூர்ந்து மனதிறங்கினார், வாதை நிறுத்தப்பட்டது. பெப்ருவரி மூன்றாம் வாரமுதல் காலரா மறைந்தது.

(முதலூர் சபையில் மட்டும் அக்காலத்தில் காலராவினால் மரித்தவர்கள் தொகை 151)

அருள்திரு D A கிறிஸ்துதாஸ் ஐயர் அவர்களின் வரலாற்று புத்தகத்தில் இருந்து திரட்டியது…