Home Faith & Encouragement நம்பிக்கையற்ற சூழ்நிலையில் நம்பிக்கை (ஆதி 28: 10-22)

நம்பிக்கையற்ற சூழ்நிலையில் நம்பிக்கை (ஆதி 28: 10-22)

167
0

By Johnson

இன்று நாம் அனைவரும் நம்பிக்கையற்ற, நிச்சயமற்ற ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். இதற்கு காரணம் கொரோனா என்ற ஒரு கொடிய தொற்று நோய். கடந்த ஆண்டு வரை இந்த சூழ்நிலை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் ஒவ்வொரு திட்டத்தை செய்திட ஆயத்தமாயிருந்தோம். சிலர் வீடுகட்ட, சிலர் தொழிலை வளர்த்திட, இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று ஆண்டு முழுவதும் என்ன செய்ய வேண்டும் என்று அட்டவணை போட்டு வைத்தனர்.

தேவ ஊழியராக இருந்தால் எங்கெங்கு கூடுகை நடத்தலாம், ஊழியத்தை எவ்வாறு விரிவுபடுத்தலாம் என்று, அரசியல் தலைவர்களாக இருந்தால் அவர்களின் திட்டம் வேறு விதமாக இருந்தது. ஆனால் நம் அனைவரின் திட்டங்களும், எண்ண ஓட்டங்களும் இன்று உறைந்து போயின.
கொரோனா, தனிமைப்படுத்துதல், ஊரடங்கு, கொரோனா இரண்டாம் அலை, இது போன்ற வார்த்தைகள் நம் உள்ளத்தை மிகவும் பதற வைக்கின்றது.

மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டால் நம்மை சுற்றி வாழும் நண்பர், உறவுகள், சுற்றத்தார் நம்மை பார்க்கும் மற்றும் பழகும் விதம் நம்மை சோர்வடைய செய்கிறது. சில நேரங்களில் எல்லாரும் இருந்தாலும் நாம் அனாதை போல உணர்வது வேதனையிலும் வேதனை.
வேதத்திலும் ஒரு மனிதன் நம்மை போல் தனிமைப் படுத்தப்பட்டவனாக, நம்பிக்கை இழந்தவனாக, எதிர்காலத்தை குறித்து நிச்சயமற்றவனாக மாறினான் அவன் தான் யாக்கோபு. ஒருவேளை யாக்கோபின் பிரச்சினைகளும் நமது பிரச்சினைகளும் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் அவனுக்கும் நமக்கும் உள்ள சூழ்நிலை ஒன்றே நம்பிக்கையற்ற நிலை.

யாக்கோபுக்கு தாய், தகப்பன் இருந்தும் தனித்து விடப்பட்டான் (ஆதி 27:45). எசாவின் கோபத்தால் அவன் தன் பெற்றோரை பிரிய நேரிட்டது. அதேபோல நாமும் கொரோனாவின் தாக்கத்தால் அநேக சொந்தங்கள் இருந்தாலும் இன்று யாரையும் எளிதில் காண முடியாது, ஒருவித பயமும் தயக்கமும் எல்லோருக்கும் உள்ளது, யாக்கோபுக்கு அநேக ஆசீர்வாதங்களை ஈசாக்கு கொடுத்திருந்தார் ஆனால் அதைக்கொண்டு அவனால் நிம்மதியாக வாழ முடியவில்லை மாறாக நிம்மதியின்றி ஓடுகிறான் (ஆதி 27:43,44).

இந்த கொரோனா காலத்தில் பொருளாதாரத்தில் செழிப்பாக உள்ள எத்தனையோ மனிதர்கள், தலைவர்கள், நடிகர்கள் அவைகளால் தங்கள் ஜீவனை காக்க முடியும் என்று உறுதியாக நம்ப முடியவில்லை. மேலும் பயத்தில் எத்தனையோ நபர்கள் தற்கொலை செய்துள்ளனர். எழை மக்களோ வாழவும் முடியாமல் மாளவும் முடியாமல் நிம்மதியை தொலைத்து நிற்கின்றனர்.

மூன்றாவது காரியம் தரம் தாழ்ந்த வாழ்க்கைக்கு (ஆதி 28:11) யாக்கோபு தள்ளப் பட்டான். மிகப்பெரிய செல்வந்தனின் மகன் இப்போது தூங்குவதற்கு ஒரு கல்லை தலையணையாக உபயோகப் படுத்தும் நிலைக்கு தள்ளப் பட்டான். இன்று நம்மைச் சுற்றியும் பலபேர் பெரிய அளவிலான பதவிகளில் பல கம்பெனிகளில் பணிபுரிந்து தற்போது இந்த கொடிய காலத்தால் ஊதிய குறைப்பு, ஆட்குறைப்பு போன்றவற்றால் அவதிப்படுகின்றனர்.

எனது நண்பன் ஒருவன் கூறியது. அவனது நிறுவனத்தில் நேரடியாக ஆட்களை குறைக்காமல் பணியாட்களை திட்டி, குறைகளை மிகைப்படுத்தி பேசி இழிவு படுத்துகின்றனர் என கூறினான். இதனை கண்டு ஆத்திரமடைந்தால் உடனே அவர்கள் கூறும் பதில் ‘ பிடிக்கவில்லையென்றால் வேலையை விட்டுவிட்டு’ என்று கூறுகின்றனர்.

இப்படி யாக்கோபைப் போல நம் வாழ்க்கையும் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் இருந்தாலும் நமக்கு நம்பிக்கை தர வல்லவர் தேவன் ஒருவரே! ஆம் அங்கே பாருங்கள் தோல்விகளோடு, சோர்வடைந்து, பலங்குன்றி படுத்திருந்த யாக்கொபுக்கு உதவ அங்கே எந்த மனிதனும் வரவில்லை.
எனதருமை தேவ பிள்ளைகளே இந்த இக்கட்டான கால கட்டத்தில் தேவனை பற்றிக் கொள்ளுங்கள். தேவ உறவு மட்டுமே நமக்கு ஆறுதலையும், நம்பிக்கையும், தெளிவையும் தரும். இரும்புத் துகள் காந்தந்தை நோக்கி ஈர்க்கபடுவது போல தேவனை நோக்கி ஓடுங்கள்.

தேவன் யாக்கோபுக்கு ஒரு நம்பிக்கையை தருகிறார் (ஆதி 28:15) நான் உன்னோடே இருப்பேன், காப்பேன், கைவிடமாட்டேன். இதே போல தேவன் நம்மையும் ஆறுதல் படுத்த முடியும். இந்த வார்த்தைகள் ஒரு புதிய பெலனை அவனுக்கு தந்தது. சோர்வுகள் நீங்கின புது உற்சாகம் பெற்றான்.’

இந்த துன்ப வேளையில் நீங்கள் இழப்புகளை சந்தித்தவராக இருக்கலாம், சோர்வடைந்து காணப்படலாம், ஆறுதல் சொல்ல யாரும் இல்லாதிருக்காலாம் ஆனால் தேவனை நோக்கிப் பாருங்கள் யோவான் 14:27 இல் நம்முடைய ஆண்டவர் இவ்வாறாக சொல்லுகிறார் “என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு கொடுக்கிறேன்”. நாம் கலங்க வேண்டாம், பயப்பட வேண்டாம் அவர் இந்த இக்கட்டான சூழ்நிலையில் சமாதானம் தந்து வழி நடத்துவார். தேவ சமாதானம் உங்கள் இருதயத்தில் வரும். ஆமென்.

தேவனே நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கி
சேர்வதே என் ஆவல் பூமியில்…………..